கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நுழைந்த இரண்டு காட்டெருமைகளை கண்டு, சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிக நேரம் எடுத்து, கண்டு ரசிக்ககூடிய இடமாக பிரையன்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த பிரையண்ட் பூங்காவில், பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் கம்பி வேலி அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில், திடீரென இரண்டு காட்டெருமைகள் புகுந்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் பூங்கா பணியாளர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். சுற்றுலா வந்த பயணிகள், காட்டெருமைகள் அங்கும் இங்குமாக ஓடியதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் தோட்டக்கலை துறை சார்பில் பூங்காவை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.