பாபநாசம் சுற்று வட்டார பகுதியில், இரவில் தொடர்ந்து, கரடி நடமாட்டம் இருப்பதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான அனவன் குடியிருப்பு, கோட்டைவிளைபட்டி, பசுக்கிடைவிளை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் கரடி சுற்றித் திரிவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பசுக்கிடைவிளை வடக்கு பகுதியிலுள்ள இலுப்படியார் சுடலை ஈஸ்வரர் கோயில் வளாகத்தில், கடந்த சில நாட்களாகவே கரடியின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றிரவு கோயில் கதவுகளில் ஏறி உள்ளே நுழைந்த 3 கரடிகள், கோயில் வளாகத்தில் அங்கும் இங்குமாக நீண்ட நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. இதேபோல் பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு திரட்டுவிளை சுடலை மாடசாமி கோயிலில் ராட்சத கரடி சுற்றி திரிந்தது. இந்த வீடியோ காட்சி, வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து அடர்வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.