கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பெருவிழா 14.01.2026 இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பேராயர் பாண்டிசேரி, கடலூர் மறை மாவட்டம் மேதகு முனைவர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னை ஓவியம் பொறிக்கப்பட்ட கொடியை மேதகு ஆயர் ஜீவானந்தம் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் முகாச பரூர் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன் பாளையக்காரர்கள் மற்றும் மறைவட்ட குருக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவை காரியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கொடியேற்றத்தை காண்பதற்காக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலத்தில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகின்ற 23ஆம் தேதி காலை தேர்த்திருவிழா திருப்பலியும் இரவு 9 மணி அளவில் புனித பெரியநாயகி அன்னைத் தேர் பவனியும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இதையும் படியுங்கள் : திருக்கல்யாண மாதா திருத்தலத்தின் தேரோட்டம்