தலைநகர் சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மகப்பேறு பிரிவுக்கு அருகே ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி கும்பல்களுக்கு இடையேயான பகைக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையை கொலைக் களமாக மாற்றியிருக்கும் பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. சென்னை, கொளத்தூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆதிகேசவன் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கள்ளக்காதலி சாருமதி அழைத்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறான் ரவுடி ஆதி கேசவன். சாருமதியின் தோழி சுசித்ரா மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மகப்பேறு வார்டுக்கு அருகிலேயே கள்ளக்காதலி சாருமதியும், ரவுடி ஆதிகேசவனும் தூங்கிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விடியற்காலை 4 மணி அளவில், அரசு மருத்துவமனைக்குள் அரிவாளுடன் புகுந்த மர்ம கும்பல், நேரடியாக மகப்பேறு வார்டுக்கு அருகே சென்றிருக்கிறது. அங்கு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த ஆதிகேசவனை அரிவாளால் கூறு போட்டு கொலை செய்த கும்பல், வந்த வேலை முடிந்ததும் தப்பியோடியிருக்கிறது. மருத்துவமனைக்குள் நிகழ்ந்த கொலையை பார்த்து அலறி போன மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்க வழக்கம் போல் வந்து விசாரணையை தொடங்கினர்.முதற்கட்ட விசாரணையில் ரவுடி ஆதிகேசவன், பிரபல ரவுடியான விக்கி என்ற அமாவாசையின் கூட்டாளி என்பதும், 2022ஆம் ஆண்டு கொளத்தூரில் வைத்து ரவுடி பழனி என்பவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஆதிகேசவன், சிறைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரவுடி ஆதிகேசவன்கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆதிகேசவனை காதலி சாருமதி தான் அரசு மருத்துவமனைக்கு வரவழைத்திருக்கிறார். அதோடு, மருத்துவமனையிலேயே காதலனான ரவுடி ஆதிகேசவனை மது அருந்த வைத்திருக்கிறார் சாருமதி. மது மயக்கத்தில் ரவுடி ஆதிகேசவன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது தான் ரவுடி கும்பலும் வந்திருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை இருக்கிறது. அப்படி இருக்கையில், ரவுடியை கொலை செய்ய மருத்துவமனையை MURDER SPOT-ஆக தேர்வு செய்யும் அளவுக்கு ரவுடி கும்பல்களுக்கு பயமில்லாமல் போயிருக்கிறது. 24 மணி நேரமும் இயங்கும் அரசு மருத்துவமனையில் எந்நேரமும் ஆட்கள், காவலாளிகள் இருப்பார்கள் என தெரிந்தும் கூட உள்ளே புகுந்து ரவுடியை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு வரும் சக நோயாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது.ஆயுதங்களுடன் அரசு மருத்துவமனைக்குள் ரவுடிகள் வந்து செல்லும் வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் இரவு நேர காவலாளிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புறக் காவல் நிலையமும் செயல்பட்டு வரும் நிலையில், இரவு பணியில் 2 காவலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், ரவுடிகள் உள்ளே நுழைந்ததை யாருமே கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசு மருத்துவமனைக்குள் யார் வந்தாலும் சோதனை கூட செய்யாமல் இஷ்டத்துக்கு அனுமதிப்பதின் விளைவு தான் மகப்பேறு வார்டுக்கு அருகே கொலை நிகழ்ந்திருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து 300 மீட்டர்தூரத்திலேயே துணை ஆணையர் அலுவலகம் அமைந்திருக்கும் நிலையில், எப்படி ரவுடிகளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது? காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? கொலை நடந்து ரவுடிகள் வெளியே தப்பி ஓடும் வரை புறக்காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகிறது. தரமில்லாத சிகிச்சை என்ற பயத்தில் அரசு மருத்துவமனைக்கு வர தயங்கும் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன இந்த மாதிரியான கொலை சம்பவங்கள்.இதையும் பாருங்கள் - நெருப்பை மூட்டிய அண்ணாமலை