சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன் மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் கண்முன்னே தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்த நிலையில், இரட்டை கொலை செய்து விட்டோம் என்ற பயம் சிறிதும் இன்றி, வீட்டிற்கு சென்று மது போதையில் விழுந்து கிடந்தவனை போலீசார் கைது செய்தனர்.எதிர்வீட்டு நபருடன் தகாத உறவுதலைநகர் சென்னையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கணவன் - மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி - ஜமுனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், எதிர் வீட்டில் வசித்து வந்த சுசில் என்பவருடன் ஜமுனாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான சுசிலும் குடும்பத்தை மறந்து விட்டு ஜமுனா உடன் நெருங்கி பழகி வந்த நிலையில், அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.கணவனை பிரிந்து...மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து, அக்கம் பக்கத்தில் விசாரித்து உண்மையை தெரிந்து கொண்ட பார்த்தசாரதி, உடனே ஜமுனா மற்றும் சுசிலை அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளதால் தகாத உறவை கை விடுமாறு பல முறை எடுத்துக் கூறியும், அதனை காது கொடுத்து கேட்காத ஜமுனா, தனது காதலுக்கு தடையாக இருந்த கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.மனைவி உடன் தகராறு, விபரீதம் இதனால் 2 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழும் பார்த்தசாரதி, சோகத்தில் மது போதைக்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. அதோடு, தகாத உறவால் மனைவி மற்றும் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு, சுசில் மட்டும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு பார்த்தசாரதியின் மனம் படாதபாடு பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை தலைக்கேறிய போதையில் சுசில் வீட்டிற்கு சென்று பார்த்தசாரதி வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால் சுசில் வீட்டில் இல்லாத நிலையில், அவரின் மனைவி கிரிஜாவிடம் தகராறு செய்த பார்த்தசாரதி திடீரென தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிரிஜாவை பலமுறை குத்திக் கொலை செய்தார்.பார்த்தசாரதி கைது தனது கண்முன்னே தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை பார்த்து பதறி போன கிரிஜாவின் 10 வயது மகன், உடனே செல்போனில் தந்தையை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளான். மகன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுசில் அடித்து பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கேயே காத்திருந்த பார்த்தசாரதி, அவரையும் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் பலமாக கத்தியால் குத்தினான். இதில் குடல் பகுதி வெளியே வந்ததில் சுசிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற உறவு இரண்டு உயிர்களை காவு வாங்கியது மட்டுமல்லாமல், பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளின் வாழ்க்கையையும் கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. Related Link விருந்துக்கு சென்ற காதல் ஜோடி, விபரீதம்