நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த அலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியரான அன்பரசு மற்றும் வகுப்பு ஆசிரியர்களான பாஸ்கர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பாடம் எடுப்பதைத் தவிர்த்து , மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் புகார் தெரிவித்த நிலையில், அரசுப்பள்ளியை சூழ்ந்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ரவி செல்வம், வட்டார கல்வி அதிகாரி காமாட்சி, குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் விசாரணை செய்துள்ளனர். பின்னர் மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணையின் முழு அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியரிடம் வழங்கப்பட்டு அதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும், அன்பரசை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பெற்றோர்கள் தங்களது கூட்டத்தை கலைக்காத நிலையில் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவர்களிடம் சமாதனம் பேசி அனுப்பி வைக்க முற்பட்டபோது, ஆசியர் அன்பரசை போலீசார் கைது செய்யாமல் பாதுகாப்போடுஅழைத்துச் சென்றதை பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் கொந்தளித்த நிலையில் பாதுகாபு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.