தென் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் உடனடியாக கழிவுநீர் கலப்பதை தடுப்பது சாத்தியமற்றது எனவும், விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பதிலளித்து இருக்கிறார். தாமிரச்சத்து நிறைந்து காணப்படும் தாமிரபரணியில் சாக்கடை நீர் ஆறாய் பாய்ந்து மாசுபடுவது மக்களை கலக்கமடைய செய்திருக்கிறது.. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை தூத்துக்குடி இடையே பாய்ந்து பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, தென் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை மாநகராட்சிக்குள் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது தண்ணீரை பயன்படுத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுவையான நீர் என பெயர் பெற்ற தாமிரபரணி ஆற்றின் இரு புறங்களிலும் 16 இடங்களில் சாக்கடை நேரடியாக கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.தாமிரபரணியின் கழிவுநீர் கலந்த நீரை பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு கட்டாயம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனை உடனடியாக தடுக்காவிட்டால் தாமிர பரணி ஆறும் கூவம் போல் மாறிவிடும் எனவும் வேதனையை வெளிப்படுத்தினர்.இதனிடையே, நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கழிவுநீர் கலக்கப்படும் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுப்பது என்பது சாத்தியமற்றது, பிரத்யேக திட்டம் வரையரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சுகபத்ரா கூறினார். பல லட்சம் மக்கள் தாமிரபரணி ஆற்றை நம்பியிருக்கும் சூழலில் பல இடங்களில் கழிவுநீர் கலப்பது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகவும், தாமிரபரணியின் புனிதத்தை காப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறுவது வெறும் அலங்கார வார்த்தை என சமூக ஆர்வலர் சாடினார்.ஆட்சிக்கட்டிலில் ஆட்சியாளர்கள் மாறினாலும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது மட்டும் மாறவில்லை என ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் மக்கள், இனியாவது கழிவுநீரை ஆற்றில் கலக்க விடாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.