தமிழ்நாடு ஹோட்டல் மூடல் : தருமபுரி மாவட்ட மக்களின் மினி ஊட்டி என்று அழைக்கப்படும் வத்தல்மலை தருமபுரியில் இருந்து 25 கி.மீ. துாரத்தில் உள்ளது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய சாலையில் பயணித்து அங்கு செல்ல வேண்டும். இந்த வத்தல் மலையை சுற்றி பெரியூர், சின்னாங்காடு, பால் சிலம்பு உள்ளிட்ட12 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் ராகி, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்கள் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. மேலும் காபி, தேயிலை, மிளகு உள்ளிட்டவைகளும் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கின்றனர். இப்பகுதியில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு வத்தல்மலையை கடந்த 2011ல் சுற்றுலா தலமாக அறிவித்தது. 2013 ஆண்டு சாலை உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மலைப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் சாகச சுற்றுலா தலமாக வத்தல்மலையை மாற்ற ஹோட்டல் மற்றும் வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடங்கி, கடந்தாண்டு முடிவடைந்தது. மலை பாங்கான இடத்திற்கு வரும் சுற்றுலா பயணியரை தங்க வைப்பதற்காக தமிழக சுற்றுலாத்துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் தமிழக அரசு ஹோட்டலை திறக்கப்படாமல் உள்ளது. ஹோட்டலில் உணவு பரிமாறும் அறை, கழிப்பறை, வியூ-பாயின்ட் போன்றவற்றை கொண்ட இரண்டு அடுக்கு கட்டடம் தயாராக உள்ளது. இந்த ஹோட்டலை தனியார் பராமரிக்க ஏதுவாக நடப்பு ஆண்டில் இரண்டு முறை டெண்டர் விடப்பட்டது. இங்கு குடிநீர் வசதி இன்றியும், ஹோட்டலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக, ஜல்லி கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமாக உள்ளதாலும், சுற்றுலா பயணியர் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் கட்டிடம் கட்டி முடிந்த பின்பும் ஒப்பந்ததாரருக்கு இன்னமும் முழுமையான பணத்தை தமிழக அரசு ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒப்பனதாரர் ஓட்டலில் நுழைவாயிலில் தாழிட்டு பூட்டிச் சென்று விட்டார். தமிழக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் குண்டும் குழியமாக உள்ள சாலைகளை சீரமைத்து சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Related Link இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த மாணவன்