கரூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய தலைவர்களின் பெயர்களும், காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களும் எழுத்துப்பிழையோடு காட்சியளிப்பது கல்வியாளர்கள் மத்தியில்வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு முன் அதிகாரிகள் யாரும் எழுத்து பிழைகளையெல்லாம் பார்க்கவில்லையா என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், மழலை செல்வங்களுக்கு அடித்தளமே அங்கன்வாடி மையம்தான் அங்கேயே இத்தனை பிழைகளா? என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.தமிழ் இனி மெல்லச்சாகும் விழித்திடு தமிழா என்ற வரிகளை கேட்கும்போதே தமிழ் மீது தீராத காதல் கொண்டவர்களுக்கு மனம் பதறும்.. அப்படி இருக்கும்போது தேசியக்கொடி முதல் மகாத்மா காந்தி வரையிலான அத்தனை வார்த்தைகளிலும் எழுத்துப்பிழைகள் என்றால் தமிழ் பற்றாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் எப்படி மனம் பதறாமல் இருக்கும்? என்பதே பலரது ஆதங்கம்..கரூர் மாவட்டம் கீழக்குட்டப்பட்டியில் ரூபாய் 11.93 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை காந்தி ஜெயந்தி நாளில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விநாயகர் கைகளில் மங்கள சின்னமாக இருக்கும் ஸ்வஸ்திக் சின்னத்தை நேரு புகைப்படத்தின் கன்னத்தில் வரைந்து அதன் முன்பு பூஜை செய்யப்பட்டது..Bதொடர்ந்து, அதன் அருகிலேயே பட்டொளி வீசி பறப்பதுபோல் சுவற்றில் வரையப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை தேசிகொடி என எழுதப்பட்டு பிழையோடு காட்சியளித்தது. தேசியக்கொடிக்குதான் இந்த நிலையென்றால் காந்தியின் பெயரில் துணைக்கால் இல்லாமல் மிஸ் ஆகி இருந்தது.. அடுத்து, கொய்யாப்பழத்தை கோய்யாபலம் என்றும் வெண்டைக்காயை வெட்டககாய் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதேபோல் தர்பூசணியை தர்புசனி என்றும் வாழைப்பழத்தை வாழைபலம் என்றும் திராட்சையை திரச்சை என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த பிழைகள் ஒருபுறம் சிரிப்பை வரவழைத்தாலும் இது என்னய்யா தமிழுக்கு வந்த சோதனை என்று வருத்தப்படவும் வைத்தது.. இதேபோல் தமிழ் மாதங்களிலும் ஐப்பசிக்கு ஐயப்பசி என்ற பிழையும், கார்த்திகைக்கு க் இல்லாமலும் இருந்தது.. தமிழ் மாதங்களில்கூட 2 பிழைகள்தான் ஆனால் ஆங்கில மாதம் பக்கம் வந்தால் 5 மாதங்களின் பெயர்களும் பிழையோடுதான் இருந்தது.. பார்க்க அழகாக படங்களை வரைந்து முத்து முத்தாக எழுத்துக்களையும் எழுதி எண்ண புண்ணியம் எனக்கூறும் கல்வியாளர்கள் தேசிய தலைவர்களின் பெயர்களை பிழைகளாக எழுதி அதனைதான் அங்கன்வாடிக்கு வரும் மழலை செல்வங்களுக்கு கற்று கொடுக்க போகிறார்களா? என கேள்வி எழுப்புகின்றனர்.அங்கன்வாடி திறப்பு விழாவில் கலந்துகொண்டு எழுத்து பிழைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்ற குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினியை தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போதுவரை கட்டிடம் BDO கன்ட்ரோலில்தான் உள்ளது, பிழைகளை எல்லாம் மாற்றியபிறகுதான் சாவியை கையில் வாங்குவோம் எனக்கூறினார்..