பிரசித்தி பெற்ற சுருளி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், வடுகப்பட்டியில் உள்ள சுருளி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுருளி சுவாமிகளின் ஜீவ சமாதி மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்திற்கு 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, பிரம்மாண்டமாக தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.