வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே எல்லப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் ஆபத்தான முறையில் குழாயை பிடித்து, கட்டடத்தின் மேலே ஏறி மழைநீர் மற்றும் குப்பையை அகற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.பள்ளி கட்டடத்தின் மேல் பகுதியில் குப்பைகள் சேர்ந்ததால் மழைநீர் வெளியேற வழியின்றி அங்கேயே தேங்கி சுவர்களில் தண்ணீர் கசிந்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்பைகளை அகற்றும்படி கூறிய ஆசிரியர்கள், குழாய் வழியாக மாணவர்களை ஏற வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த மாணவனை உடனே இறங்கும்படி கூறினர். இதனால், அந்த மாணவனும் மீண்டும் பைப் வழியாக கீழே இறங்கினான். பின்னர், அங்குள்ள ஆசிரியர்களிடம் எங்கள் பிள்ளைகளை படிக்க மட்டும் தான் இங்கு அனுப்பி வைக்கிறோம், ஆனால், நீங்கள் எப்படி மாணவர்களை இப்படி ஆபத்தான முறையில் வேலை வாங்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபட வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.