நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ரவி கையால், பட்டம் பெற மறுத்து, துணை வேந்தரிடம் பட்டம் பெற்றுக் கொண்ட மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், 650க்கும் மேற்பட்டோருக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் வரிசையாக வந்து, பட்டங்களை வாங்கிச் சென்றனர். தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, வரிசையில் வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற ஆய்வு மாணவி, திடீரென ஆளுநரிடம் பட்டத்தை தராமல், சற்று நகர்ந்து சென்று, பல்கலைக் கழக துணைவேந்தரான சந்திரசேகரிடம் காட்டி, வாழ்த்து பெற்றதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனால், பல்கலைக்கழக விழா அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, "தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால், அவரிடம் பட்டம் வாங்க விரும்பவில்லை" என்று, மாணவி ஜீன் ஜோசப் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கண்டனம்:இந்நிலையில், இந்த சம்பவத்தை பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறியிருக்கிறார். காலம் காலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.