திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மதிய உணவு இடைவேளையின் போது அரசுப்பள்ளியிலிருந்து வெளியே வந்த 4ஆம் வகுப்பு மாணவியை தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்தணி கே.கே.நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் நித்யஸ்ரீ என்ற மாணவி, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவரை தெருநாய்கள் துரத்திச் சென்று கடித்து குதறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் நாய்களை துரத்தி மாணவியை மீட்டனர். காலில் படுகாயமடைந்த மாணவி, திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கன்வாடி, அரசுப்பள்ளி, மாணவர் விடுதி அமைந்துள்ள பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.