மயிலாடுதுறை அருகே, பள்ளிக் குழந்தைகளை இறக்கிவிட சென்ற தனியார் பள்ளி பேருந்தை வழி மறித்த மதுபோதை இளைஞர்கள், உள்ளே இருந்தது பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் பேருந்தின் மீது சரமாரியாக கற்களை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர். பள்ளிக் குழந்தைகள் இருந்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியது தவறுதான் என உணர்ந்து இளைஞர் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் அடுத்த அரசலங்குடிக்கு பள்ளி குழந்தைகளை இறக்கிவிட மாலை வேளையில், தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பள்ளி பேருந்தை வழி மறித்த, மதுபோதை இளைஞர்கள் மூன்று பேர் அட்ராசிட்டியில் ஈடுபட தொடங்கினர்.முன்னாள் இருப்பது பள்ளி பேருந்து, உள்ளே இருப்பவர்கள் பிஞ்சுக் குழந்தைகள் என்பது கூட அறியாத அளவுக்கு, அதீத போதையில் இருந்த இளைஞர்கள், பேருந்து எங்கும் செல்லக் கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டனர். பேருந்தின் கதவை திறக்க முயற்சித்தபோது கதவு திறக்காததால், அங்கிருந்த கண்ணாடியை உடைக்க முயற்சித்தனர். பின்னர் பேருந்தின் முன்பகுதியில் இருந்த வைப்பரையும்(wiper) பறிக்க முயற்சித்தனர். அப்போது பேருந்தின் உள்ளே பள்ளி குழந்தைகள் உள்ளனர் என ஆசிரியர்கள் கூறியும் அடங்காத இளைஞர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். இதை பார்த்த பிஞ்சுக் குழந்தைகள் செய்தறியாது கத்திக் கொண்டே இருந்தனர்.இது போதாது என்று, எல்லை மீறிய மதுபோதை இளைஞர் ஒருவர், கையில் கற்களை வைத்து கொண்டு மூன்று முறை சரமாரியாக பேருந்தின் மீது தாக்குதல் நடத்தினார். அவ்வேளையில் உள்ளே இருந்த ஆசிரியர்களும், பள்ளிக் குழந்தைகளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பதறினர். அப்போது சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை அங்கிருந்து கொண்டு சென்றார்.அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் வருத்தப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபடும்போது, தமக்கு என்ன என்பதுபோல் அப்பகுதியை சேர்ந்த சிலர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான்.இளைஞர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி பேருந்தின் மீது தாக்குதல் நடத்தில் தாமரை செல்வன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பின்னர், தாமரை செல்வன் என்பவர், தான் செய்தது தவறு தான், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் பேருந்தில் தாக்குதல் நடத்தியிருக்க கூடாது என வருத்தம் தெரிவித்தார். இருந்த போதும், பள்ளி பேருந்தை மதுபோதை இளைஞர்கள் வழிமறித்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையும் பாருங்கள் - மதுபோதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி, கற்கள் வீசி சரமாரி தாக்குதல், துடித்த பிஞ்சுக் குழந்தைகள்