அரக்கோணத்தில், மூன்று ரயில்வே சுரங்கப் பாதையில், 3 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அரக்கோணம் நகருக்கு சென்று வருவதற்கு கிராமத்தின் வழியே உள்ள சென்னை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில் பாதையை கடந்து செல்வதற்கான ரயில்வே கேட் இருந்த நிலையில், அது மூடப்பட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்கப்பாதை அமைத்து தரப்பட்டது. இந்நிலையில், தொடர் மழையால், 3 முதல் 4 அடி உயரத்திற்கு மழை நீர் சுரங்கப்பாதையில் தேங்கியதால், பொது மக்கள் ரயில் பாதையை, ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் 10 கிமீ சுற்றி அரக்கோணம் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், அரக்கோணம் ரயில்வே இன்ஜின் பராமரிப்பு பணி மனை செல்லக்கூடிய ரயில்வே சுரங்க பாதையிலும், கைனூர் கிராமத்திற்கு செல்லும் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த மூன்று சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.