தொடர் கனமழையால், மழை நீருடன் ஊற்று நீரும், விவசாய நிலத்தில் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த விளை பயிர்கள் சேதம் அடைந்தன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்மன் பட்டி, மீனூர், கொள்ளை மேடு உள்ளிட்ட இடங்களில், தொடர் கன மழை காரணமாக, நீர் நிலைகள் உயர்ந்து வந்தன. இந்நிலையில், குடியாத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை, வெண்டைக்காய், கத்திரிக்காய், நெல் பயிர், வேர்க்கடலை, மக்காச்சோளம், சாமந்தி பூ மற்றும் அரைக்கீரை, வெள்ளரி, கீரை, புதினா, கொத்தமல்லி, மாட்டு தீவனப் பயிர் உள்ளிட்ட விளை பயிர்கள், மழை நீருடன் வந்த ஊற்றுநீரில் மூழ்கி சேதமானது இந்த பயிர்களை, உழவர் சந்தையில் தினந்தோறும் விற்பனை செய்து வந்த விவசாயிகள், பெரும் கடனாளியானதாக வேதனை தெரிவித்தனர். சேதமான விளை பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.