அரசு உத்தரவை மீறி, காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களை கட்டாயப்படுத்தி, பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக, பெற்றோர் புகார் கூறி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்து, சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர். இது, மாணவர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சலை ஏற்படுத்தும் என பெற்றோர் வேதனை தெரிவித்தனர். காலாண்டு தேர்வு நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நிலையிலும், சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. எனவே, தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.