திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சொத்தை அபகரித்துக் கொண்டு காலணியால் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 70 வயது மூதாட்டி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கமலா, தனது மகன் வீட்டிற்கு அருகிலேயே தனியாக குடிசை அமைத்து வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் 18 வருடங்களாக வேலைக்கு சென்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக ஓய்வுபெற்ற நிலையில், நிறுவனத்தில் இருந்து கொடுத்த லட்சக்கணக்கான ரூபாயையும் அவரது மகன் பழனிச்சாமி அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பணத்தை கேட்ட போது தாய் கமலா பெயரில் இருந்த சொத்துகளையும் மனைவி பெயருக்கு மாற்றி விட்டதாக கூறியதோடு, வயது முதிர்ந்த தாயை காலணியால் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார்.