அரசியலில் குதித்தபோது, ரிமோட்டையும், டிவியையும் ஆக்ரோஷமாக உடைத்ததற்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளது, தஞ்சை மாவட்ட மக்களை மட்டுமல்ல, தமிழக மக்களையே வியந்து பார்க்க வைத்துள்ளது. தான் வீசிய ரிமோட்டை வேறொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ள நிலையில், அடடா காலம் கடந்து சொன்னாலும், ஆண்டவர் வெயிட்டான விளக்கம் அளித்துள்ளதாக பலரும் மெச்சிக் கொள்கின்றனர்.கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வலதுமில்லை, இடதுமில்லை நடுவில் இருப்பது தான் மய்யத்தின் நோக்கம் எனக்கூறி 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக களமிறங்கினார். அந்த தேர்தலை சந்திப்பதற்காக அவர் வெளியிட்ட பிரச்சார வீடியோவை தற்போது பார்த்தாலும், ரட்சகன் படத்தில் நாகார்ஜூனாவுக்கு நரம்பு புடைத்ததுபோல புடைக்கும். முகத்தில் அவ்வளவு ஆக்ரோஷத்துடன் ரிமோட்டை டிவியில் தூக்கி எறிந்து, குடும்ப அரசியல் தான் வேண்டுமா? அல்லது உரிமைக்காக போராடியபோது அடித்து துரத்தினார்களே அவர்கள் வேண்டுமா? நலத்திட்டம் என்றபெயரில் விவசாயிகளை நிர்வாணமாய் ஓடவிட்டார்களே அவர்கள் வேண்டுமா? அல்லது கார்ப்பரேட் கைக்கூலிகளாக மாறியவர்கள் வேண்டுமா? என பொங்கி எழுந்து கேள்வி கேட்ட கமல், குனிந்து கும்பிடாமல் நிமிர்ந்து ஓட்டுப்போடுங்கள் என வீரியத்தையும் வெளிப்படுத்தினார்.அதன் விளைவாக, அதிகபட்சமாக கோவையில் 11.6 சதவீத வாக்குகளையும், திருப்பூரில் 5.6 சதவீத வாக்குகளையும் வாங்கினார். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.அதன்பிறகு, தனித்து தான் போட்டி எனக்கூறிய கமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரே கிடைக்காமல் அலைமோதினார். அதனாலேயே, 140 இடங்களிலுமே படுதோல்வி தான் மிஞ்சியது.கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 2021 சட்டமன்ற தேர்தலில் 2.45 சதவீத வாக்குகளே கிடைத்தது. இதற்குமேல் தனித்துப்போட்டி என வீம்பு செய்து கொண்டிருந்தால் அரசியலில் கரைசேரவே முடியாது என கணக்குப்போட்ட கமல், திமுக கூட்டணியில் ஐக்கியமாகி உஷாராக எம்.பி. சீட்டையும் பெற்றுக் கொண்டார். அதோடு, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.இதற்கு ஏன் டிவி ரிமோட்டை போட்டு சல்லி சல்லியாக நொறுக்க வேண்டும்? திமுகவில்போய் அய்யோ சாமி என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என பவ்வியமாக சேர்ந்து கொள்ள வேண்டும்? என பலரும் கலாய்த்து தள்ளினர்.இவற்றை எல்லாம் காதில் வாங்காத ஆண்டவர், 6 ஆண்டுகள் எப்படியோ பதில் சொல்லாமலேயே காலத்தை தள்ளிவிட்டார். எஞ்சிய காலத்தையுமே அப்படியே கழித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் ரிமோட்டையும், டிவியையும் உடைத்ததற்கு தானாகவே முன்வந்து காரணம் சொல்லி வாண்டடாக நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டி கிராமத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் அணியின் இளைஞர் அணி மாநில செயலாளரும், பாடலாசிரியருமான சினேகனின் தந்தை சிவசங்குவின் உருவப்பட திறப்பு விழாவில் பேசிய கமல்ஹாசன், 2019ஆம் ஆண்டு ரிமோட்டால் டிவியை உடைத்ததற்கு விளக்கமளித்தார். டிவி ரிமோட்டை உடைத்தேன் தான்; இல்லையென்று சொல்லவில்லை, விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு என ஏற்கனவே சொன்னேனே என கூறினார். தான் தூக்கிப்போட்ட ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான் என நக்கலாக முகபாவனையை வைத்துக்கொண்டு பேசிய கமலின் பேச்சைக்கேட்டு விழாவில் இருந்த அத்தனைபேரும் புரிந்தது போல கை தட்டினர்.தூக்கிப்போட்ட ரிமோட்டை அப்படியே விடக்கூடாது, மாநிலத்தோடுதான் இருக்க வேண்டும், கல்வியே அப்படிதான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம், ரிமோட்டை கொடுப்போமா? எடுத்துக்கொண்டு வா, திரும்ப ரிமோட்டை ஒளித்து வைப்போம், ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்ததாக கூறினார். இந்த அலையன்ஸ் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள் இல்லாவிட்டால் சும்மா இருங்கள், ஜனநாயகம் என்று வந்தால் இந்த தொல்லையெல்லாம் இருந்தே தீரும் என தனது பேச்சை முடித்துக் கொண்டார் கமல்.அறுவடைநேரத்தில் மழை பெய்து நெல்மணிகள் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்தில் உறைந்திருக்கும் தஞ்சை மக்களுக்கு, ஆண்டவர் கூறிய விளக்கம் புரிந்ததா? என்று தெரியவில்லை. ஆண்டவா இது என்ன புது சோதனையா? உங்கள் விளக்கமே வேண்டாம், பார்த்து பத்திரமாக ஊருக்கு செல்லுங்கள் சாமி என கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தார்களாம்.கமல் கூறிய விளக்கத்தை கேட்டு, கம்பன் பிறந்த தஞ்சையே தடுமாறிவிட்டது எனக்கூறும் அங்குள்ள மக்கள், உடைந்த ரிமோட்டும் டிவியும் எப்படி போனாலும் பரவாயில்லை, நெல்மணிகள் பாழாய்போன மன உளைச்சலுக்கு மத்தியில், டிவி ரிமோட் உடைத்ததற்கான விளக்கம் என்ற பெயரில், மேலும் மனஉளைச்சலை கொடுக்க வேண்டாம் என நொந்து கொள்கிறார்களாம்.அதோடு, ரிமோட்டுக்கே சுற்றி வளைத்து புரியாமல் ஒரு விளக்கம் கொடுக்கிறார் என்றால் அடுத்த மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன பேசுவாரோ? எப்படி பேசுவாரோ? அங்குள்ள மொழிபெயர்ப்பாளர் பாவம்தான் என்றும் கூறி வருகிறார்களாம்.இதையும் பாருங்கள் - மன்னிப்பு கேட்ட கமல் - கண் கலங்கிய "சினேகன், கன்னிகா" | KamalHaasan | KamalSpeech