ஈரோடு, அடுத்த திண்டல் ரூபி கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் பதுங்கிய பாம்பு பிடிபட்டுள்ளது. இங்குள்ள சுப்ரமணியம் என்பவரது மனைவி, கழிவறைக்கு சென்ற போது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், தீயணைப்பு துறையினர் வந்து பார்ப்பதற்குள், கழிவறையின் கழிவு நீர் வெளியேற்றும் குழாய் வழியாக சென்று, பாம்பு பதுங்கியுள்ளது. பாம்பை பிடிக்க போராடியும் முடியவில்லை. கழிவறையை பயன்படுத்த முடியாமல் சுப்பிரமணியம், கழிவறை கதவை பூட்டி வைத்தார். இந்நிலையில், பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், எட்டு அடி நீள சாரைப்பாம்பை, லாவகமாக பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தார். கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாயை முறையாக அடைத்தால், இதுமாதிரி பாம்புகள் கழிவறையை நோக்கி படையெடுப்பது தவிர்க்கப்படும் என பாம்பு பிடி வீரர் அறிவுறுத்தியுள்ளார்.