நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு 6 வார காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், வேலை மறுக்கப்பட்டதாகவும் கூறி, முற்றுகை போராட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம், கடையம் யூனியன், தெற்கு கடையம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு, ஆறு வாரங்களுக்கு மேலாக யூனியன் நிர்வாகம் ஊதியம் வழங்காமல், காலம் தாழ்த்தி தருவதால் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ராமநதி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கு, வேலை இல்லை என்று நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், பணியாளர்கள் யூனியன் அதிகாரியிடம் முறையிட்டதால், கடையம் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அதிகாரிகள் கூறியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.