ஈரோடு மாவட்டம், சூளையில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு நிறுவனம் சட்ட விரோதமாக இயங்கி வருவதை கண்டுபிடித்த அதிகாரிகள், 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில், ஈரோடு-சத்தி சாலையில் சூளை என்ற இடத்தில் ஆய்வு செய்த மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கேரி பேக் நிறுவனம் இயங்கி வருவதை கண்டறிந்தனர். கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுத்து குஜராத்தை சேர்ந்த மகாவீர் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சுமார் ஐந்து டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு ’சீல்’ வைக்கப்பட்டது. மேலும் நிறுவன உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.