திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டார் மடம் பகுதியில், அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த சுவாமி தயானந்த வித்யாலயா தனியார் பள்ளி பூட்டி, சீல் வைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அங்கு படித்து வந்த 75 மாணவர்கள் தனியார் அல்லது அரசுப் பள்ளிகளில் படிப்பை தொடரலாம் எனவும், 6 மாத காலத்திற்கு மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி வாயில் முன்பாக, பெற்றோர் போராட்டம் நடத்தினர்.சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், தனியார் பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேன்மொழி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் இணைந்து பள்ளிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பித் தருமாறு, பெற்றோர் பள்ளி வாசலில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.