துர்க்காஷ்டமி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து காளி மலை கோயிலுக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை இன்று புறப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள காளி மலை கோயில், தென்னிந்தியாவின் புண்ணிய தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இந்த கோயில் உள்ளது. குழந்தை பாக்கியம், தீராத நோய்களை தீர்த்து வைக்கும் புண்ணிய தலமான இங்கு, சித்ரா பௌர்ணமி மற்றும் துர்க்காஷ்டமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான துர்க்காஷ்டமி விழா, இன்று தொடங்கியது. காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சமுத்திர பூஜையுடன் புனித கும்பம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இருமுடி கட்டி, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் புனித யாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரையானது, இன்று மாலை, தோட்டியோடு மௌன குருசாமி கோயிலை சென்றடைகிறது. வருகிற 30ஆம் தேதி காலையில் காளி மலை சென்றடைகிறது. காளிமலையில், நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், அஷ்டமி பூஜை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.