கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் மத்திய அரசு ஊழியர் ஒருவர் மகனை கொலை செய்துவிட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் மத்திய அரசின் பணத்தை கையாடல் செய்தது அம்பலப்பட்டு விட்டதால், பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் மத்திய அரசு ஊழியர் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கான உண்மை காரணம் வெளியாகி திடுக்கிட வைத்திருக்கிறது.சென்னை, அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய அரசு ஊழியரான நவீன் கண்ணன், கடந்த மாதம் 27ஆம் தேதி, தனது மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, காதல் மனைவியையும் கழுத்தறுத்து கொலை செய்ய பார்த்ததோடு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மத்திய பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டரான இவரது தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் பரவின. அதாவது, நவீன் கண்ணன், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போட்ட பணமும் நட்டமானதால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.இந்நிலையில் தான், நவீன் கண்ணன் தாம் வேலை பார்த்த மத்திய அரசின் பணத்தையே கையாடல் செய்தது தெரிய வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பணம் செலுத்தும் பிரிவில் பணி செய்து வந்த நவீன், அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தனது தாய், தந்தை, உறவினர் என பலரது அக்கவுண்டுகளுக்கு டிரான்ஸ்பர் செய்து கையாடல் செய்ததாகவும், இந்த மொத்த பணத்தையும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யப்பட்டதும் ஆடிட்டிங்கில் தெரிய வந்திருப்பதாக மத்திய பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறியுள்ளார்.சுமார் 4 கோடி ரூபாயை, நவீன் கண்ணன் கையாடல் செய்தது தொடர்பான அறிக்கை, டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து, கையாடல் விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்ற விசாரணையை கையிலெடுத்திருக்கிறது சிபிஐ.இதன் தொடர்ச்சியாக சிபிஐ அதிகாரிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.சதுரங்க வீரரான நவீன் கண்ணன், கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் மத்திய அரசு பணிக்கு சேர்ந்ததாகவும், தொழில் நுணுக்கங்களை அறிந்து கொண்டு நன்றாக வேலை பார்த்து வந்ததாகவும் ஜெயசீலன் கூறுகிறார். வருடாந்திர ஆடிட்டிங்கின் போது தான் 4 கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும், இதையடுத்து விசாரணைக்கு அழைத்தும் நவீன் கண்ணன் வராமல் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் விசாரணையை தொடங்கலாம் என்று நினைத்த நிலையில், திங்கள் கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அலுவலகத்தில் எந்த ஒரு நபரின் துணையும் இல்லாமல் தனி ஒரு ஆளாக கோடிக்கணக்கான மத்திய அரசின் பணத்தை ஊழியர் ஒருவர், ஒரு வருடமாக கையாடல் செய்ததும் உயரதிகாரிகளும் மெத்தனமாக இருந்ததும், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையும் பாருங்கள் - Central Govt Employee Death| மத்திய அரசு ஊழியர் த*கொ*லயில் திருப்பம், ரூ.4 கோடி மக்கள் பணம் கையாடல்