காஞ்சிபுரம் அருகே, ஆட்டுபுத்தூரில் கத்தி முனையில் நான்கரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், 17 பேர் கொண்ட கேரள கும்பலில் 5 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். மீதமுள்ள 12 பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஜாடின், தனது நிறுவனத்தின் ஓட்டுநர்கள் இருவர் மூலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நான்கரை கோடி ரூபாய் பணத்தை காரில் அனுப்பி வைத்தார். காஞ்சிபுரம் அருகேயுள்ள ஆட்டுபுத்தூர் அருகே, கார் வந்தபோது, 3 கார்களில் வந்த 17 பேர் கொண்ட மர்ம கும்பல், காரை மடக்கி ஓட்டுநர்களை கத்தி முனையில் மிரட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில், கொள்ளை கும்பல் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கேரளா சென்ற தனிப்படை போலீசார், பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களை சேர்ந்த சந்தோஷ் சுஜிலால் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் மேலும் 12 பேர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைது செய்த ஐந்து பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவல் விசாரணைக்கு போலீசார் எடுத்தனர். காவல் ஆய்வாளர்கள் அலெக்சாண்டர், சிவகுமார் தலைமையிலான போலீசார், மீண்டும் கேரளா சென்று கொள்ளையர்களையும், பணத்தையும் பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையும் பாருங்கள்... ரூ.4.5 கோடி கொள்ளை - 5 பேர் அதிரடி கைது | Arrest | kanchipuram | theft | Amount Theft