தொடர் மழை, கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று மதியம் துவங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. கோதை ஆறு மற்றும் மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி 3 பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து வருகின்றனர். தொடரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.