புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள் மாநில அந்தஸ்து கேட்டு போராடுவோம் என முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். அரசின் எண்ணமும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது தான் என பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, தனி நபர் தீர்மானமாக எடுக்காமல் அரசு தீர்மானமாக எடுத்துக்கொள்வதாக கூறினார். இதையடுத்து சபாநாயகர் செல்வன், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.