ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில், தமிழ் மொழியில் குடமுழுக்கு விழாவை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள சிவ ஆலயங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம், வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களின் விருப்பப்படியும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியும், குடமுழுக்கு பெருவிழாவை தமிழில் நடத்திட வேண்டும் என வலியுறுத்தி, தெய்வத் தமிழ் பேரவை சார்பில், கோயில் செயல் அலுவலர் முருகனை நேரில் சந்தித்து, தேனி மாவட்டம் குச்சனூர் ராசயோக சித்தர் பீட வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் தலைமையிலான நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில், இனி அனைத்து கோயில் குடமுழுக்கு விழாக்களை, தமிழ் முறையிலேயே நடத்திட வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்துவதாக குச்சனூர் கிழார் தெரிவித்தார்.