அவிநாசியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, சாலையோர வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரின் முக்கிய வீதிகளில் சாலையோர ஆக்கிரப்புகளால் பல்வேறு விபத்து மற்றும் இடையூறு ஏற்படுவதாகவும், சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என்றும் அவிநாசி வணிகர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும், தவறினால், போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்படும் என கடந்த இரண்டு நாட்களாக ஆட்டோவில் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறையினர், அவிநாசி நகராட்சி நிர்வாகம் தரப்பில், கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கச்சேரி வீதி மற்றும் சேயூர் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, கணவனால் கைவிடப்பட்ட பெண் வைத்திருந்த சாலையோர பழக்கடையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். அதைக் கண்ட அந்த பெண் அழுது புலம்பியபடி தனது கடையை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அழுது கூச்சலிட்டார். தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்து, கிழக்கு ரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடும் வாக்குவாதம் நிலவியது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் விளம்பர பலகை, நிழல் கூரை, தகர செட்டு என அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.