குன்னூர் நகரப் பகுதியின், முக்கிய நீர் ஆதாரமான, ரேலியா அணையின் நீர் மட்டம் குறைந்து, வறண்டு காணப்படுகிறது. குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான ரேலியா அணை, சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மாதங்களில் மழை இல்லை. இதனால், தற்போதைய நீர் இருப்பு 43 அடியிலிருந்து 20 அடியாக குறைந்தது. குன்னூர் நகராட்சி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலையில், தற்போது, ரேலியா அணையிலிருந்து நகராட்சிக்கு தினமும் 10 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் பெறப்படுகிறது. மீதமுள்ள 40 லட்சம் லிட்டர் குடிநீர், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், கரன்சி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ரேலியா அணை சுற்று வட்டார பகுதிகளில், இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே, ரேலியா அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வறண்டுள்ள நீர்நிலைப் பகுதிகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி, அந்த பகுதிகளை மேலும் ஆழப்படுத்தி, அதிகளவு நீர் சேமிக்கக்கூடிய வகையில் பணி மேற்கொள்ள, போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கி, தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.