விடிய விடிய பெய்த கன மழையால், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் கருவறைக்குள் மழை நீர் புகுந்தது. தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ளது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சனீஸ்வரன் கோயில். இன்று ஐப்பசி மாத பிறப்பு மற்றும் முதல் சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் இங்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு குச்சனூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கோயிலை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. சனீஸ்வரன் மூலக் கடவுளாக வீற்றிருக்கும் கருவறையில் மழை நீர் புகுந்து, முழங்கால் அளவு தேங்கியது. பக்தர்கள் நின்று தரிசிக்கும் பகுதியிலும் மழை நீர் தேங்கி உள்ளது. கோயில் நிர்வாகம் உடனடியாக மோட்டார் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும், கருவறைக்குள்ளும் கருவறைக்கு வெளியேயும் நீர் தேங்கி உள்ளதால், பக்தர்கள் தேங்கிய மழை நீரில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். கோயிலை சுற்றி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் நிலையில் பக்தர்கள் பரிகார தீபம் போடுவதற்கும் சுற்றி வருவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.