புதுச்சேரியில், வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, சாலையில் மழை நீர், குளம் போல் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அண்ணா சாலை, பாரதி வீதி, காமராஜர் சாலை, இந்திரா காந்தி சதுக்கம், ரெட்டியார் பாளையம், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புதுச்சேரியில், நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வந்ததன் காரணமாக, நகரப்பகுதி மற்றும் கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்திலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து, பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் மிக கனமழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதன் காரணமாக நகரப் பகுதி முழுவதும் மழை நீரால் சுழன்று, முழுமையாக ஸ்தம்பித்தது.