ஒரே மாதத்தில் 85 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மொத்த கொள்முதலை ஒரே மாதத்தில் எட்டி அசத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில், அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு 348 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை, திருவாரூர் முழுவதும் 85,190 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுவதுமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 93 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, கடந்த ஆண்டு இலக்கை ஒரே மாதத்தில் எட்டி சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு, கடந்த ஆண்டு கொள்முதலை விட மூன்று மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக, நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர். வேறு எந்த பகுதிகளிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவைப்பட்டால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அந்த பகுதிகளில் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.