பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி புரட்டாசி 2 வது சனிக்கிழமையையொட்டி சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் மனமுருக வழிபாடு செய்தனர். நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமையையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாத பக்தர்கள் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.புரட்டாசி 2 வது சனிக்கிழமையொட்டி, திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் மூலவர் தங்கக்காப்பு அலங்காரத்திலும் உற்சவர் கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க ஏரளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா பக்தி முழக்கத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வயல்களில் விளைந்த தானியங்களை பக்தர்கள் இறைவனுக்கு காணிக்கையாகவும் செலுத்தினர். புரட்டாசி 2 வது சனிக்கிழமையையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் உள்ளிட்ட 9 நவதிருப்தி ஸ்தலங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி ஈரோடு பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோவிலில், பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா தொடங்கிய நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான மக்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர்.