தஞ்சை மாவட்டத்தில், இன்னும் 10 நாட்களில் கொள்முதல் பணிகள் நிறைவு பெறும் என்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் தெரிவித்தார். மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில், நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டது. கொள்முதல் பணிகள் 90 சதவிகிதத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை 36 ஆயிரம் விவசாயிகளுக்கு 446 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில், வரலாற்றில் இல்லாத வகையில், இந்தாண்டு குறுவை சாகுபடி, இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தினமும் மூன்று ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நடைபெற்றுள்ளது.