கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கெரிகேபள்ளி கேட் என்னுமிடத்தில் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தீரன்சின்னமலை தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளிப்பேருந்து புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானத்தில் 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.ஊத்தங்கரை தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி பேருந்து ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளி நோக்கி 30 மாணவர்களுடன் வந்துள்ளது. அப்போது கெரிகேபள்ளி கேட் என்னுமிடத்தில் எதிரே வந்த மற்றொரு பள்ளி பேருந்து மோதுவது போல் வந்ததால், ஓட்டுனர் தில்பாஷா (42) பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த புளியமரத்தில் பேருந்து பலமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 30 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் மொகமது தருன், தர்ஷன், சன்சிதா, இமையவன், இனியா, விஷ்ணுபிரியா, திரிஷ்கான், கோபிகாஶ்ரீ மற்றும் மதுமிதா ஆகிய 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதில் சிலருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். பள்ளி பேருந்து விபத்து ஆன சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.