காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ரூ.130 கோடி மதிப்பீட்டில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விரிவாக்க பணியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன் பிடித் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு, விசைப்படகுகளை நிறுத்துவதற்கு போதியஅளவு இடவசதி இல்லாததால், துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய காரைக்கால் மாவட்ட மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.130 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய துறைமுக விரிவாக்க பணியை பிரதமர் மோடி காரைக்காலில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டார்கள். காரைக்கால் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணியின் மூலம் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.