எம்பி சீட் தருவதாக நம்ப வைத்து, இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் எனப் பேசியதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளித்துள்ள பிரேமலதா, தான் அவ்வாறு பேசவே இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் நான் சொன்னதாக போடுகிறார்கள். அது கண்டனத்துக்குரியது, எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்து விட்டது. நாங்கள் எதை சொல்கிறோமோ அதை மட்டும் பிரசுரம் செய்யுங்கள். அண்ணன் இபிஎஸ் குறித்து, நான் பேசியதாக ஒரு தகவல் பரவுகிறது. எங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கலந்துரையாடினோம். அதில் நிர்வாகிகளின் கேள்விக்கு நான் பதில் கூறினேன். உடனே இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொன்னதாக மக்களிடையே பரப்பியவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.நான் சொல்லாத விஷயத்தை நான் சொன்னதுபோல நீங்கள் சொல்லக் கூடாது. அப்படியான வார்த்தை என் வாயிலிருந்து வரவே வராது. நான் அப்படிப் பேசியதே இல்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நாங்கள் எது வேண்டுமானாலும் ஆலோசனை செய்வோம். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? நான் என்ன பேட்டி கொடுக்கிறேனோ அதைத்தான் செய்தியாக போட வேண்டும். உங்கள் சுயலாபத்துக்காக மாற்றி மாற்றி திரித்து செய்தி வெளியிட்டால், மேல்மருவத்தூர் அம்மன் முன்னால் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து இனி என்னிடம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதீர்கள்.இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.இதையும் கேளுங்க; முதுகில் குத்திவிட்டாரா இபிஎஸ்? உண்மையை உடைத்த பிரேமலதா | Premalatha Vijayakanth | EPS