கடலூர் மாவட்டம், அன்னவல்லியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 பேர் மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை, முத்து நகர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், ஆவினன் குடி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலர் இமாம் உசேன் ஆகியோர் கடலூரில் சொந்த வேலையை முடித்துவிட்டு மது அருந்திய நிலையில் ஆவினங்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அன்னவல்லி பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டு சம்பளம் பிரித்துக் கொண்டிருந்த கூலி தொலிலாளர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக, பெரிய காட்டு சாகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அன்னவெளி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாஸ்கர் மற்றும் மோகன் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த முத்துநகர் காவல்துறையினர் படுகாயமடைந்த பாஸ்கர் மற்றும் மோகன் ஆகியோரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மோகன் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், மதுபோதையில் கவனக்குறைவாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், ஆவினன்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை முத்துநகர் காவல்நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், காவலர் இமாம் உசேனை பணியிடை நீக்கம் செய்தும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சாலை ஓரம் நின்று சம்பளம் பிரித்துக் கொண்டிருந்த அப்பாவி கூலி தொழிலாளர்கள் இருவர் போலீசாரின் அஜாக்கிரதையால், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையும் பாருங்கள் - அப்பாவிகள் மீது மோதிய போலீசாரின் கார், மதுபோதையில் காவலர்கள் அட்டூழியம்| Cuddalore | Accident News