நாகை மாவட்டம் திருக்குவளை அருகே நகை கடையில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். மணக்குடி கடைத்தெருவில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வந்த கணேசன் என்பவரது கடையில், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பூட்டி இருந்த ஆறு பூட்டுகளும் உடைக்கப்பட்டு சுமார் 45 லட்சம் மதிப்பிலான 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 50 கிராம் தங்க நகைகள் திருடு போனது. இதனையடுத்து புகாரின் பேரில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த போலீசாருக்கு, அவர்கள் நத்தப்பள்ளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நத்தப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் பண்ருட்டியை சேர்ந்த ஐய்யனார் இருவரையும் கைது செய்தனர்.