செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் காப்புக்காடு பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மான்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வண்டலூர் மலையை சுற்றியுள்ள காப்புக்காடுகளில் முயல், மான், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வரும் நிலையில், பெருங்களத்தூர் பகுதி மக்கள் காப்புக்காடுகளின் ஓரங்களில் பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டி வருகின்றனர். கடந்த மாதம் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ட மான்கள் உயிரிழந்தன. எனவே, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதையும், மான்கள் உயிரிழப்பை தடுக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.