கமுதி அருகே கோயில் திருவிழாவில், சாக்கு வேடமணிந்த பக்தர்களுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகுவள்ளி அம்மன் கோயில் திருவிழா கடந்த 7ஆம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. நிறைவு நாளான இன்று, முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. முளைப்பாரி விழாவை முன்னிட்டு, உடல் முழுவதும் சாக்கால் போர்த்தி, வைக்கோல் திணித்து, சாக்கு வேடமணிந்த சாக்கு மனிதர்கள் 3 பேர் மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர் முளைப்பாரி திடலில் கும்மி மற்றும் மேள தாளங்களுடன் சாக்கு வேடம் அணிந்தவர்களும் கும்மி அடித்து முளைப்பாரிக்கு முன்பு சென்றனர். தாரை தப்பட்டையோடு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில், பெண்கள் முளைப்பாரிகளோடு நகர் வலம் வந்து அழகு வள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு கண்மாயில் பாரிகளை கரைத்தனர்.