திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். மேல் மலை கூக்கால் கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில், ஒரு சிறுத்தை சர்வ சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பொது மக்கள், சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். கொடைக்கானலில் தினம் தோறும் வன விலங்குகள் நகர் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உலா வருவது வழக்கமாக இருந்து வருகிறது என பொது மக்கள் அச்சம் தெரிவித்தனர். தளவு கானல் என்ற இடத்தில், ஒரு சிறுத்தை சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்று, புதரில் மறைந்து நின்று வாகனத்தை உற்றுப் பார்த்த காட்சியை, வாகனத்தின் உள்ளே இருந்த சுற்றுலா பயணி வீடியோ எடுத்தார். தற்போது, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.