பத்மநாபபுரம் அரண்மனையைக் காண, தமிழகம், கேரளாவில் இருந்து, குவிந்த சுற்றுலா பயணிகள் கட்டிட கலையை கண்டு ரசித்தனர். தொடர் விடுமுறை என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை காண, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில், பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையை காண, தமிழகம் மற்றும் கேரளா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அரண்மனை, முழுக்க முழுக்க கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனையைக் காண வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், டிக்கெட் எடுத்து நீண்ட வரிசையில் நின்று, அரண்மனையின் கட்டிட கலை நுட்பங்களை கண்டு ரசித்தனர். மன்னர் காலத்தில் பயன்படுத்தி வந்த வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பார்வையிட்டு சென்றனர். அரண்மனையின் உள்ளே அமைந்துள்ள மந்திரசாலை, தாய்க் கொட்டாரம், நாடக சாலை, நான்கடுக்கு மாளிகை, தெற்கு கொட்டாரம், மணி மாளிகை, அன்னதான மண்டபம் போன்ற பழங்காலத்து கட்டிடங்களையும் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், செல்போனில் புகைப்படம் எடுத்து உற்சாகத்துடன் சென்றனர்.