ராமநாதபுரம் மாவட்டத்தில், அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க, நூறு நாள் வேலை திட்டத்தில் பனை விதைகளை சேகரித்து, நீர்நிலைகளில் வளர்க்கும் முன்னெடுப்பை தொடங்கி உள்ள பெண்கள் பாராட்டை பெற்றுள்ளனர். நயினார் கோவில் ஒன்றியம், கிளியூரை அடுத்த அம்மன் பனையூர் கிராமத்தில், கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நீர்நிலைகள் வறண்டு, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீராதாரத்தையும் மண் அரிப்பையும் பாதுகாப்பதோடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் இருந்த பனை மரங்கள், தற்போது அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், பெண்கள் களம் இறங்கி உள்ளனர். பனை விதைகளை கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் சேகரித்து, அதனை முறையாக பிரித்து, சீரான இடைவெளியில் குழி தொண்டி ஊரணி, குளம், கண்மாய் என நீர்நிலைகளில் விதைத்து வருகின்றனர் கிராம பெண்கள். இவர்களின் இந்த செயல்பாடு சூழலியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.