பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த சென்னை மேயர் பிரியா, மாணவர்களிடையே கலந்துரையாடினார். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், கடற்கரை மற்றும் குளக்கரை பகுதிகளில் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் பணியினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை ஈசிஆர் பாலவாக்கம் கடற்கரை பகுதியில், தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது மேயர் பிரியா கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரம் நட வேண்டும் என திட்டமிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பனை விதைகள் விதைக்க வேண்டும் என பாலவாக்கம் கடற்கரைப் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடபட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் பனை விதை நடப்பட்டது. சாலை ஓர பகுதிகளிலும், ஆற்றோரம் போன்ற பகுதிகளிலும் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேலாக மரக்கன்றுகள் நடும் பணிகளை சென்னை மாநகராட்சி செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிக்குட்பட்ட 45 பகுதிகளில், 85 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. அதேபோல், நீர் நிலை பகுதிகளில் 41 இடங்களில் 65 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. வரும் காலம் மழைக்காலம் என்பதால் இயற்கையாகவே மரங்கள் வளரும் சூழல் ஏற்படும். இவ்வாறு மேயர் பிரியா கூறினர்.