சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இன்ஸ்டா லைவ்வில் பேசி பிரபலமான போலி நுட வைத்தியரை கைது செய்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரது வைத்தியசாலைக்கு சீல் வைத்து தைலங்கள், பச்சிலை மூலிகைகள் போன்றவற்றை கைப்பற்றினர். மாயமில்லே, மந்திரமில்லே, தைலம் தேய்த்தால் வலி பறந்துபோகும் என்று, இன்ஸ்டாவில் உருட்டிய கைராசி நுட வைத்தியர் சிக்கியது எப்படி? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பிரபலமான, சிங்கம்புணரி புத்தூர் கட்டு பாண்டிசிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் புத்தூர் கட்டு பாண்டி என்ற நெடுஞ்செழியன். நாட்டு வைத்தியரான இவர், சிங்கம்புணரியில் நுடவு எனப்படும் எலும்பு முறிவு மற்றும் தசைப்பிடிப்பு, முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு வைத்தியம் அளித்து வந்தார். இணையத்தில் லைவ்வாக பேசி புத்தூர் கட்டு பாண்டி அளித்த சிகிச்சை, பட்டி தொட்டி என மூலை முடுக்கெல்லாம் பரவி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பிரபலமானார். இவரிடம் சிகிச்சை பெறவும், தைலம் வாங்கவும் தினமும் கூட்டம் கூடியது. பெங்களூரு, கரூர் என பல இடங்களிலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். ஒரு பக்கம் வருமானம் கொட்ட புத்தூர் கட்டு பாண்டி அடுத்ததடுத்து துவரங்குறிச்சி மற்றும் எம். கோவில்பட்டியில் கிளைகளை திறந்து அங்கும் வசூல் பார்க்கத் தொடங்கினார். ரூ.800க்கு 200 மில்லி தைல பாட்டில்தன்னை 18 சித்தர்களில் ஒருவர் எனக் கூறிக்கொண்ட புத்தூர் கட்டு பாண்டி, தன் உடம்பை தொட்டு வணங்கினால் சிகிச்சை பெறுவோர்க்கு பலன் கிடைப்பதாக கூறி வசூல் வேட்டையை ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் டோக்கன் என தன்னை இன்டர்நேஷனல் வைத்தியர் லெவலுக்கு காட்டிக்கொண்டு பில்டப் கொடுத்த புத்தூர் கட்டு பாண்டி, டோக்கன் இல்லாதவர்களிடம் 800 ரூபாயை வாங்கிக்கொண்டு 200 மில்லி தைல பாட்டிலை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இப்படி இவரிடம் சென்ற பலருக்கு சிகிச்சை கை மேல் பலன் கொடுக்க, சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வீடு மற்றும் கிளினிக்கில் ரெய்டுஇதன் பின்னரே இந்த தைலம் எப்படி தயாரிக்கப்படுகிறது? இதற்கு வாரண்டி, கேரண்டி ஏதேனும் இருக்கிறதா? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பினர். அதுவரை தூக்கத்தில் இருந்த சுகாதாரத்துறை விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தது. இது குறித்த புகாரில், தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில், திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வக்குமார், சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் அருள்தாஸ், தாசில்தார் நாகநாதன் ஆகியோர், பாண்டியின் வீடு மற்றும் கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். இதில், 10ஆம் வகுப்பில் பெயிலான புத்தூர் கட்டு பாண்டி, போலி சான்றிதழை பயன்படுத்தி நுட வைத்தியசாலையை நடத்தி வந்ததை அறிந்த அதிகாரிகள், தைல பாட்டில்கள்,எண்ணெய் வகைகள், பச்சை மூலிகை போன்றவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தைலம் தயாரிக்கும் பொருட்களின் விபரம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்து கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர். பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்மேலும், புத்தூர் கட்டு பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உரிமத்தில் குளறுபடி உள்ளதாக, சார் ஆட்சியர் கூறியுள்ள நிலையில், விசாரணைக்கு பின்னர் தான் அடுத்ததடுத்த உண்மைகள் தெரியவரும். முறையாக படித்து பட்டம்பெற்ற பல மருத்துவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கும் நிலையில், வெறும் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை மட்டுமே பார்த்து மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்பதே இந்த செய்தித் தொகுப்பு உணர்த்துகிறது.இதையும் பாருங்கள் - நாட்டு வைத்தியத்தால் பெண் பலி