தஞ்சையில் இருந்து, அரவைக்காக, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரிக்கு தலா 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்காததால் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் தேங்கிக் கிடந்தது. இதனால் போதிய இட வசதி இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வெளிப்பகுதியில் கொட்டி வைத்து விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், பருவமழை அதிக அளவில் பெய்ததால் நெல் மணிகள் முளைக்க துவங்கியது. விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், தற்போது இரண்டு சரக்கு ரயில்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக பெறப்பட்ட 4000 டன் நெல் மூட்டைகள் இரண்டு சரக்கு ரயில்கள் மூலம் அரவைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு, வருகிற 31ஆம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.