பட்டாசு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வையூர் கிராம பகுதியில் பட்டாசு ஆலை அமைக்க இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் பட்டாசு ஆலை அமைப்பதால் வையூர், நல்ல மரம், முத்துலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என இப்பகுதி மக்கள், உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்திருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வையூர் கிராமத்தில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று பச்சை துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.